July 20, 2018

நொறுக்ஸ்

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௨௧’ ம் நாள் (21) வியாழக்கிழமை / 05.01.2017
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்பது நமக்கு – நம் மக்களுக்கு புரியும் போது, நம் பாதி கவலைகள் தீர்ந்துவிடும்! அரசியலும், அரசியல்வாதிகளும் மக்களின் சேவைக்கே என்பது நமக்கு – நம் மக்களுக்கு புரியும் போது நமது மீதி கவலைகளும் தீர்ந்துவிடும்!
துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௨௦’ ம் நாள் (20) புதன்கிழமை / 04.01.2017
மனிதம் மரித்ததோ என்றெண்ணும்படி செய்திகள் உலவுகின்றன. ஊடகங்கள் விற்பனையில் மட்டுமே குறிக்கோளாய் இருப்பதை நாம் உணரவில்லையெனில் நாட்டில் பெரும் கலவரங்கள் வெடிக்கும்! – ஊடகங்களின் உண்மை முகம் அறிவோம்!
துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௧௯’ ம் நாள் (19) செவ்வாய்க்கிழமை / 03.01.2017
அரசியல்வாதிகள் ஆமை போல் ஆகி வருகின்றனர்! “ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது!” அவர்கள் கையிலெடுக்கும் அனைத்தும் அலங்கோலமாகி வருகிறது – ஊழல் / கருப்பு பணம் ஒழிப்பு, உள்கட்டமைப்பு – விவசாய மேம்பாட்டில் சுணக்கம்
துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௧௮’ ம் நாள் (18) திங்கட்கிழமை / 02.01.2017
வருத்ததிற்குரிய சம்பவங்கள், தண்டிக்கப்பட வேண்டிய தனிமனித உரிமை மீறல்கள் – ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது! கலச்சார சீரழிவு காரணமா? கல்வியின் குறைபாடா? 
துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௧௭’ ம் நாள் (17) ஞாயிற்றுக்கிழமை / 01.01.2017
ஒரு இரண்டாயிரம் ஆண்டு கணக்கிற்கே ஆடும் நண்பர்களே, கணக்கிலடங்கா வருடங்களின், உலகின் மூத்த தலைமுறையின் வாரிசுகளான நீங்கள் உங்கள் குடிச்சிறப்பைத் தொலைத்தா கொடி பிடிக்கிறீர்கள்? மனத்தில் சிறந்தவர்கள், மனோ தைரியத்தில் சிறந்தவர்கள் நாம்! நம் குலம் மறந்தோம்! இனம் மறந்தோம்! – ஆங்கிலப்புத்தாண்டு! 
துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௧௬’ ம் நாள் (16) சனிக்கிழமை / 31.12.2016
அரசியல்வாதிகள் நாட்டின் நலனே பிரதானமாகக் கருதினால் இந்த அவலங்கள் நிகழ்ந்திருக்காது! மக்கள் மன்றமென்பது மக்களின் பிரச்சினைகளை களைவதற்கன்றி தத்தமது தகிடுதத்தங்களை மறைப்பதற்கல்ல! – பாராளுமன்ற கூட்ட முடக்கம்
துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௧௪’ ம் நாள் (15) வெள்ளிக்கிழமை / 30.12.2016
இன்றே கடைசி! 500, 1000 கணக்குல கட்றவங்க, கட்டிக்கோங்க! அப்புறம் தலைவரே! இன்று 50 வது நாள்! உங்களுக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ! இந்த நாளுக்காகத்தான் நாங்க காத்துகிடந்தோம்! பணப்பற்றாக்குறை தீரல! முன்னேற்றம் சாத்தியமா? இல்லையா? இன்னொரு ‘மன் கீ பாத்’ க்காக காத்திருக்கோம்!
துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௧௪’ ம் நாள் (14) வியாழக்கிழமை / 29.12.2016
சொந்தங்களுக்கிடையே வரும் ஒரு விதமான போட்டி-பொறாமை நட்புக்கிடையே வருவதில்லை! அப்படி வந்தால் அங்கு நட்பில்லை என்று அர்த்தம்! (இந்தியா – ரஷ்யா நட்பு) இந்த நட்பின் முறிவே நமது தற்போதைய கடைசி மூவைந்தாண்டு ஆட்சியாளர்களின் சாதனை! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! நட்பின் வலிமையைவிட துரோகத்தின் வலி அதிகம்!
துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௧௩’ ம் நாள் (13) புதன்கிழமை / 28.12.2016
நண்பன் எதிரியானால் வெற்றியில்லை! எதிரி நண்பரானால் முன்னேற்றம் இல்லை! நாம் நம் கடமையில் தெளிவாக இருந்தால் இவ்விருவரைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை!
துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௧௨’ ம் நாள் (12) செவ்வாய்க்கிழமை / 27.12.2016

ஜீ நெட்வொர்க்கில் ‘பதாஞ்சலி’ விளம்பரங்கள் ஏன்? பாபா ராம்தேவ் திடீரென்று பொதுநலவாதி ஆனது ஏன்? யாரும் கேட்கக்கூடாது! கேட்கவும் முடியாது! வியாபாரம் அன்பரே! வியாபாரம்!

துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௧௧’ ம் நாள் (11) திங்கட்கிழமை / 26.12.2016

மின்னுவதெல்லாம் பொன்னல்ல! உண்மை சொல்பவரெல்லாம் யோக்கியருமல்லர்! சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாததும், சொல்லத் தேவையில்லாத இடத்தில் சொல்வதும் தீமையே தரும்!

துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௧௦’ ம் நாள் (10) ஞாயிற்றுக்கிழமை / 25.12.2016

மனிதரை மிருகங்களிடமிருந்தும், இயந்திரங்களிடமிருந்தும் வேறுபடுத்திக் காண்பிப்பது அவருக்கிருக்கும் மனதினாலேயே! மனித நேயமும், மனதின் ஈரமும் தீரும் போதும், காயும் போதும் உலகம் தன்னால் அழியத் தொடங்கும்!

துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௯’ ம் நாள் (9) சனிக்கிழமை / 24.12.2016

சுய பச்சாதாபம் கோழைத்தனத்தை ஊக்குவிக்கும்! சுய பரிசோதனை வீரத்தை விளைக்கும்! உயர உயர பறந்தாலும் காகம் பருந்தாகாது – இந்தியாவைப் பார்த்து உயர் மதிப்பு பண மதிப்பிழப்பு செய்த நாடுகள்: வெனிசுலா மற்றும் பாகிஸ்தான்!

துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௮’ ம் நாள் (8) வெள்ளிக்கிழமை / 23.12.2016

இந்திய அரசாங்கங்கள் கடந்த 10-15 வருடங்களில் கடைப்பிடித்துவரும் தவறான அணுகுமுறையின் விளைவே, கூடி வரும் ரஷ்யா – பாகிஸ்தான் நெருக்கம் மற்றும் வியாபாரங்களின் ஆரம்பம்! அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இடைஞ்சல்களின் போது தோள்கொடுத்து துணை நின்றிருக்க வேண்டியது இந்தியாவின் கடமை! அரசியல் சாபம்! பல நூறாண்டு பந்தத்தை சீர்குலைத்தது! எதிரிக்கு எதிரி நண்பன்! ஆனால் நாம் என்றும் துரோகியாகக் கூடாது; நமது நண்பருக்கு!

துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௭’ ம் நாள் (7) வியாழக்கிழமை / 22.12.2016

மனிதர்களின் தீர்ப்பு வேண்டுமானால் மனம் மாறலாம்; வழங்கும் மாந்தரைப் பொருத்து! இறைவன் தீர்ப்பு அவ்வாறானதன்று! அது நம் குணத்தைப் பொருத்தது! நல்லதே நினைப்போம்! நல்லதே செய்வோம்! நல்லவராய் வாழ்வோம்!

துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௬’ ம் நாள் (6) புதன்கிழமை / 21.12.2016

என்றோ படித்தது! ஏனோ நினைவிலாடுகிறது! முட்டாளின் கையில் இருக்கும் அதிகாரத்தை விட, புத்திசாலியின் கையில் இருக்கும் அதிகாரம் ஆபத்தானது!

துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௫’ ம் நாள் (5) செவ்வாய்க்கிழமை / 20.12.2016

பொறுத்தருள்வான்! புறம் சொல்லான்! பொய் சொல்லான்! எளிதாய்ப் பழகுவான்! எவரையும் பழித்துரையான்! எவர்க்கும் அஞ்சான்! எல்லோரையும் நம்புவான்! – இவர்கள் போற்றப்பட வேண்டிய மண்ணின் மாணிக்கங்கள்!

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10