மழைப்புலி

Story Highlights

  • இயற்கையன்னை - மழை

மழைப்புலி வருது! மழைப்புலி வருது!

அன்று காலைப்பொழுது மனிதர்களுக்கு அதுவும் நகரவாசிகளுக்கு ஒரு மகிழ்ச்சி குறைவான தினமே! இல்லையென்றால், வண்ணங்களின் பிரிவுகளில், மனித எண்ணங்களை ஓட்டிப் பார்க்கும், திண்ணம் நிகழ்ந்திருக்குமா?

நெருப்பு! மனிதம் பிழைத்த முதல் வழி! மனிதம் செழித்த முதல் வழி! மனிதம் புதைத்த கடை வழியும் அதுவே! வானை பூமியிடம் காட்ட மறுத்த மேகக்கூட்டங்களின், சதிக்கு ஆளும்கட்சியை எதிர்க்கட்சிகள் பழித்து வந்த வேளை! எதிர்க்கட்சிகளை எதிரிக் காட்சிகளாய் ஆளும் அரசாங்கங்கள் சித்தரித்து, திரைமறைவில் திருடிய நேர்மை! இவையெவற்றையும் அறியாமல் காற்று அந்த நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மேகக் கூட்டங்களை கொண்டு வந்து சேர்த்துக் கொண்டே இருந்தது!

ஒளியில் அறிவைத் தொலைத்த ஜீவிகள் இருளில் தம்மைத் தொலைக்கும் தன்மை சிறிது மிருகத்தனமே! வான் பிடித்து கோளேற்றும் நம்மவர்கள் அடிப்படையில் மிருக குணம் கொண்டவரே, கூட்டத்தில், இருளில் அவை வெளிவந்து நம்மை வெட்கப்பட வைத்து விடுகின்றது.

இயல்பாய் வாழ்ந்து விட்டு சென்ற மாந்தர் தம் அடிப்படை தவறி, நாமே ஒரு விதி செய்து, அதைப்பற்ற வேலை செய்து, வேட்கை செய்து, அதில் வெற்றி, தோல்வி கண்டு, வீழ்ந்தே கிடக்க ஜடமன்றென்று, இல்லாத ஊருக்கு தனியாளாய்ச் சென்று மடிய, உயிர் கொடுத்த, இயற்கையுணரா வாழ்வால், மழை பழித்து, மரம் அழித்து, மாண்பிழந்து, கிளம்புகையில் செய்த வினைகள், செய்வினைகளாய் போயினவே! 

ஆம்! அதற்கு மேல் வானத்தைக் காட்டாமல் இருக்க முடியாதே என்று மேகம் குளிர்ந்து, நீராய்க் கரைந்து, காற்றருவியில் மழையாய் வடிய ஆரம்பிக்க, வானவியல், அறிவியல் வித்தகர்கள் ஆபத்தை – அபத்தத்தை வாசிக்க, ஆஹா! வந்ததே வாழ்வென்றே வியாபாரிகள் தத்தம் கூவல்களில், செய்திகளாய் பயத்தை விற்க ஆரம்பிக்க, மலைக்குயில் கானம் பாட, இயற்கையின் இளைய பிள்ளைகள் ஆனந்தக்கூத்தாட, மூத்த முட்டாள் பிள்ளையோ முடங்க ஆரம்பித்தான்.

ஊன் தொலைத்தா ஊன் வளர்த்தோமெனில், நாமும் அரக்கரே! இயற்கையை வியாபாரமாக்கும் எல்லா கண்டுபிடிப்புகளும் தத்தம் ஆசான்களின் கடன் செய்திடும் போது, இயற்கையின் பிள்ளைகள் இழிநிலை செய்தோம்!

இனியவன் பள்ளி ஏன் விடுமுறை கொடுத்தார்கள் என்று புரிந்தும், புரியாத போதும், அடடா!, குழந்தைப் பருவத்தோடு நாம் இறந்தே வளர்கிறோம்! விடுமுறையையாவது தங்கள் விடுதலையாய் விளையாடிக் களித்த வாண்டுகள் இனியவன் மற்றும் மலர்க்கொடி; மலரவனுக்கு ஒரு செய்தியை நெற்றிப்பொட்டில் செலுத்தின!

குழந்தைப் பருவத்தில் கொஞ்சி விளையாடும் மனது, வளர வளர கெஞ்சி களவாடும் உலகைச் செய்ததே? வாழ்வின் மூலம் தொலைத்து காண்பதென்ன சுவர்க்கம்?

பூமிக்கிருந்த கோபத்தை முழுமையாக குளிர்விக்க முடியா விடினும், மேகம், பூமியை மாசு செய்த குப்பைகளையாவது அள்ள – தள்ள முடிந்ததில் சிறிது திருப்தியடைந்தது. ஏனெனில் நாம் செய்த நாகரீகம் நம்மைக் கூட தூய்மையாக வைக்கப் பழக்கவில்லை. பிறகெப்படி பொது வெளியில் மேன்மை காப்போம்!

மழைப்புலி வருது! மழைப்புலி வருது! என்னும் சிவப்பறிக்கைகளைப் போற்றுவதை விடுத்து, சிறிது இயற்கை காண்போம். அது நம்மை வாழ்விக்கும் அன்னை பூமி! அழிவெதுவும் நேராது; இயற்கையால்!

 

மழையில் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்த தனது குட்டியை, தனது நாவால் கதகதப்பாக்கிய நாய்க்கு தெரிந்த உண்மை நமக்கு மறந்ததில் வருத்தமே!

About The Author

Related posts