செக்க சிவந்த வானம் – விடியல் 2

செக்க சிவந்த வானம்
செக்க சிவந்த வானம்

Story Highlights

  • நெடுந்தொடர்கதை

செக்க சிவந்த வானம் – விடியல் 2

 

மனிதர்கள் தம் நம்பிக்கையை எதன்மீது வைக்கிறார்களோ, அதுவே அவர்களின் பலவீனமாகி விடுகிறது

 

அறிவியல் விந்தை என்பதா? மனிதனின் சாதனை என்பதா?

மனிதன், தன் அறிவைப் பயன்படுத்தி, இயற்றியது அறிவியல் என்றால், இயல்பில் அது இல்லை என்று பொருளா? அல்லது இருக்கும் ஒன்றை, தெரிந்து கொண்டது மெய்ஞானமா? விஞ்ஞானமா?

குடும்பங்கள் எங்கே? கூடி வாழ்ந்த மக்கள் எங்கே? நாடிச் சேர்த்த நட்புகள் எங்கே? இதுவும் கூட தெரியவில்லையே! இதுவும் கூட ஞாபகத்தில் இல்லையே! பலகாலம் பழகி, நன்மை, தீமைகளில் பங்குபெற்று, நல்ல நிலையில் இருக்கும்போது யாவரும் எங்கே சென்றனர்?

நல்ல நிலையில் இருக்கிறோமா? எது நல்ல நிலை? உறவாடி மகிழ்ந்த சொந்தங்கள், நட்புகள் யாருமில்லை! உணவுக்கும், உடைக்கும், உறைவிடத்திற்கும், உழைப்பில்லாமல் ஓய்வெடுப்பது நல்ல நிலைமையா?

ஆங்கிலத்தில் Discovery என்பது, இருக்கும் ஒன்றைத் தெரிந்து கொள்வது. Invention என்பது புதிதாகக் கண்டுபிடிப்பது. அறிவியல் தான் செய்தது! அறிவியல் தான் செய்தது! என்னும்போது, இயல்பிலது இல்லையா? அல்லது நாம் கண்டுபிடித்தோமா? அதாவது இருக்கின்ற ஒன்றை தெரிந்து கொண்டோமா? ஏற்கனவே, இருந்த ஒன்றைத் தெரிந்து கொண்டோம் என்றால் அறிவியல் என்ற சொல்லே பொருட்குற்றமாகாதா?

மெய்ஞானம், விஞ்ஞானம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு? உண்மையை அறிதல் மெய்ஞானம்! விஞ்ஞானம் என்பது புதிய கண்டுபிடிப்பு! – விஞ்ஞானத்தை விளிக்கும்போது, விந்தை-ஞானம் என்று ஆகிவிடுமோ? விந்தை என்பது இயல்பில் இல்லாததா?

மனிதர்கள் பல நேரங்களில் தமது இலட்சியங்களில் இருந்து விலகுவது இதுபோன்ற கவனம் சிதறிய சிந்தனைகளால் தான்! சிந்தனைகள் தவறானதா? சிந்தனை செய்வது குற்றமானதா?

கவனம் பொதுவாக எதற்கு தேவை? எண்ணிய திட்டங்கள் திண்ணமாக நிறைவேற, ஏற்படுத்திய வழி வகைகள் செம்மையாக செய்து முடிக்க, கவனம் தேவை. ஆனால், இன்று இலட்சியமாகப் பார்க்கப்படும் அந்த தரிசனத்திற்கு இந்த கவனமோ, திண்ணமோ எதுவுமே தேவையில்லை!

கூடி வாழ்ந்த குடும்பங்கள் எங்கே? நட்புகள் எங்கே? அதே சமயம், உழைப்பும் அவசியம் இல்லை, உணவும் அவசியம் இல்லை, பிறகு எப்படி நாம் உயிர் வாழ்கிறோம்? ஏன்?, எதற்கு உயிர் வாழ்கிறோம்? யாரால் உயிர் வாழ்கிறோம்? நாம் இன்று உயிர்வாழ்கிறோம் தானா?

சக மனிதர் எவரும் கண்ணில் தட்டுப்படவில்லை. ஆனால், நமது எண்ணத்தில், அந்த தரிசனத்துக்காக மட்டும் காத்திருக்கிறோம் என்று தெரிகிறது. அது மட்டும் எப்படி நமது நினைவிலாடுகிறது?

இது முதலில் பூமி தானா? அல்லது வேற்று கிரகம் எதிலும் சிக்கி விட்டோமா? மனிதர்கள் அனைவரும் சமம்! என்ற கோட்பாடு, அறிவியலால் சாத்தியமானதாக எண்ணம் எப்படி எழுந்தது? அறிவுக்கண்ணை இருளில் மூழ்கவிட்டு, இருளை உலகமென்று நம்பி விட்டோமா? காலம் என்ற ஒன்று உண்டா? அதைப் பற்றிய எண்ணம் இல்லாததால் பசியும் பெரிதாக தோன்றவில்லையா? அல்லது அறிவியல் கண்டுபிடிப்பால், உண்மையிலேயே மனிதனுக்கு உணவு தேவை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டதா?

இது சாத்தியமா? அப்படி என்றால் நாம் அணிந்திருக்கும் இந்த உடை எப்படி நமக்கு அணிவிக்கப்பட்டது? இதை அணிந்திருப்பதால்தான், பசி இல்லாமல் இருக்கிறதா? உயிர் போன்ற எந்த உணர்வுகளும் இல்லை. உயிருக்கு உணர்வுண்டா? சில காலம் முன்பு வரை, சாலையில் யாரேனும் அடிபட்டிருந்தால் கூட தத்தம் வேலைகளில் மட்டுமே மூழ்கினோம். உதவவில்லை என்றாலும் கூட, உதவும் நண்பர்களை உதாசீனப்படுத்தாமல் இருப்பதில், அவ்வாறு செய்யப்படும் உதவிகளைத் தடை செய்யாமல் இருப்பதில் கூட அக்கறை காட்டவில்லை.

கண் முன்னே, பல ஜீவன் கத்திக் கதறிச்சாக, அவற்றைக்  கொன்று குத்திப்புசித்தோம். விலங்குகள் கூட, பசித்தால் தான் கொன்றுண்ணும். ஆனால், நாம் விழாக்களுக்கெல்லாம்……?

 

வெளிப்படைத்தன்மை என்பது சுற்றிலும் கண்ணாடிகளாலான கட்டிடங்களால் அறியப்படுகிறதா? அப்படியென்றால், மற்றெந்த அறைகளிலும், வேறெவரும் தென்படவில்லையே? நாமிருக்கும் இதுவும் அறைதானா? அல்லது எதுவும் சிறையா?

 

இரவு, பகல் வித்தியாசம் தெரியவில்லை என்பது உண்மைதான். அப்படியென்றால். உறக்கமுமா இல்லாமல் போய்விடும்? பல ஆண்டுகள் பழகிய உடல் எப்படி இன்று உறக்கத்தை தவிர்த்தது? யாரும் வேலை செய்யத் தேவையில்லை. உடல் உழைப்பு அவசியம் இல்லை. அதன் பொருட்டு பணம் சேர்க்கத் தேவையில்லை. அரசாங்கங்கள், நாடுகள், எல்லைகள் எதுவும் இல்லை.

எல்லாம் சரி! எப்படி இவையெல்லாம் சாத்தியமாயிற்று? இதை சாத்தியமாக்கியவர் யார்? அறிவியல் சாதனை! எண்ணும் எதையும் ஏன் சொல்ல முயலவில்லை? ஏன் முயல வேண்டும்? யார் இருக்கிறார்கள் சொல்ல? ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது
அறிவியல்!
அறிவியல்!
அறிவியல்!

 

இன்று, அறிவில் இயல்பாகவே ஒலிக்கையில், இது ஏதோ, ஓதியோதி, ஊதி, புடம் செய்யப்பட்ட, புனை கருத்தாகவே தோன்றுகிறது. அப்படியென்றால், இந்த ஓதல் வேலையை செய்தது யார்? உலகம் முழுவதும் இருந்த மாந்தர்களை அழித்துவிட்டு, நம்மை மட்டும் உயிரோடு விட்டிருக்கிறார்களா? அதுவும் சாத்தியமில்லை! இல்லை, மனிதர்கள் அனைவரையும் தனித்தனியே அடுத்தவருக்குத் தெரியாமல் வைத்திருக்கிறார்களா? இது ஒருவிதத்தில் சாத்தியம் தான்.

 

மனிதர்கள் தங்கள் மனதினால் மட்டுமே அறியப்படுகிறார்கள். எனவே அந்த மனத்தை சமாதானப்படுத்தி விட்டால் எதுவும் சாத்தியமே.

 

விடியும்

 

 

 

 

தாங்கள் விரும்பும் முந்தைய பகுதிகளைக் காண, கீழே சொடுக்கவும்: 

விடியல் 1

About The Author

Related posts