செக்க சிவந்த வானம் – விடியல் 1

செக்க சிவந்த வானம்
செக்க சிவந்த வானம்

Story Highlights

  • நெடுந்தொடர்கதை

செக்க சிவந்த வானம்

விழித்தவுடன் மனம் கனத்தது, இனியவனுக்கு! இன்று நமக்கு அந்த தரிசனம் நிகழுமா? என்ற எதிர்பார்ப்பே வாழ்வின் தலையாய இலட்சியமாய்ப் போய்விட்டதை எண்ணியதால் ஏற்பட்ட பளு அது.

சாலையெங்கும் கடினமான கண்ணாடிகளால் ஆன கூடம். அறிவியல் வளர்ச்சி, மனிதர்கள் அனைவரும் சமமென்ற வாழும் சூழ்நிலையை ஏற்படுத்திய தருணமது. ஆனால், எல்லாம், எப்போதும், எங்கேயும் வெளிப்படை என்றால் மனிதர்கள் விலங்குகள் போல் ஆகிவிடுவோம் அல்லவா.

இப்படி மக்களுக்கு, மக்களுக்குள், மக்கள் வாழும் சமூகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்த அறிவியல், ஏன் மக்களை நேரடியாக சூரியனையும், வானத்தையும் பார்க்க அனுமதிக்கவில்லை?. நாங்கள் கல்வி பயின்ற போது இருந்த நகரங்கள் எங்கே? அட நாடுகள் எங்கே? இப்போது எம்மை நிர்வகிப்பது யார்?

அரசாங்கங்கள் இல்லை, ஆட்சிகள் இல்லை! ஆனால் அன்றாடம் வாழ்க்கை எப்படிச் செல்கிறது? அறிவியல் விந்தை அளப்பரியது. அடடே! நாம் படிக்கும்போது இதை சொல்லித்தர விட்டு விட்டனரே!. பணம்!, அது எங்கே இன்று? வேலை – வாய்ப்பு அட! எதுக்கு இங்கு?

இனி அடுத்த சமுதாயம் (அப்படியென்றால் என்ன என்றும் கேட்குமோ?) கேள்விகள் கேட்கும் அளவு தேவை என்ன இன்று? அந்த தரிசனத்தைத் தவிர?

என்ன நடக்கின்றது பூமியில் இன்று? சாலைகள் மட்டுமல்ல, வீடுகள், மாட, மாளிகைகள், என யாவும் ஓர் கூண்டுக்குள்! வெளிச்சம் நிரந்தரமாக உள்ளது. எதனால்? எப்படி? தெரியவில்லையே? தூக்கம்! அப்படியென்றால்…? அடடா! என்ன அறிவியல் வளர்ச்சி? தடையில்லா வெளிச்சம், தூக்கமென்றவொன்றே தெரியாத அளவு அதன் தேவையுள்ளது.

உலகமே சமமாய்ப் போனது, அறிவியலால்!. உறைவிடம் யாவும் ஓர் கூரைக்கீழ்; உறக்கம் அதன் தேவையே இல்லை; உழைப்பு அதுவுமெதற்கு. உண்டு, உயிர் வாழவா? உயிர் வாழ, உணவு அவசியமா? நாம் செய்த அறிவியல் சாதனையே அதுதானே!

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் இல்லை முதல் நாள் கண்ட – வாழ்ந்த உலகத்திற்கும், இன்றைய உலகிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அன்று எவையெல்லாம் மனிதர்களை பணம் கொண்டு பிரித்தாண்டதோ, அவையெல்லாம் இன்று இல்லை!.

ஆம் ஒரு படி மேலே போய், நாடுகள் இல்லை. எல்லைக்கோடுகள் இல்லை. ஆட்சிகள் இல்லை. சேனைகள் இல்லை. அறிவியல் துணை கொண்டு வாழப் பழகினோம். அரசு, அரசியல், வறுமை, ஊழல், அதிகாரம், பேராசை இவை எல்லாவற்றையும் ஒழித்தோம்.

ஆனால், இவையெல்லாவற்றையும் யார் செய்தது? எப்படி செய்தோம்?. ஆம்!, அறிவியல் செய்தது!. எமக்கு எதுவுமே ஞாபகம் வரவில்லையே? ஏன் வர வேண்டும்?. அதையும் அறிவியலால் செய்தோம்! எதுக்கு ஞாபகம் வரவேண்டும்? உயிர் வாழ அவசியமாய் இருந்தவை: உணவு, உடை, உறைவிடம். இதில் முதலாவது தேவையில்லாமல் போயிற்று!. இரண்டாவது அனைவருக்கும் பொதுவாகப் போனது!. மூன்றாவது, அதுவும் கூண்டிற்குள் வீடாய்ப் போனது. ஆமாம் நமது குடும்பமெங்கே? மற்ற குடும்பங்களெங்கே?

குடும்பம் எதற்கு? மனிதன் வாழத் தேவையான அடிப்படைகள் உள்ள போது, குடும்பங்கள் எதற்கு? அறிவியல் வழி வாழ்வு செய்த சாதனையால், வாழ்வில், மற்றவர்கள் தேவையில்லை. அட! அது சரி! அவர்கள் எங்கே? நாம் காணும் இடமெல்லாம் யாரும் கண்ணில் தட்டுப்படவில்லையே!

 

விடியும்!

About The Author

Related posts