Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

இலவசமா? அடிப்படை வசதியா?

வாக்காளர் கடமை

Story Highlights

  • இலவசமா? அடிப்படை வசதியா?

இலவசமா? அடிப்படை வசதியா?

திரும்பவும் ஒரே விசயத்தைப் பேச வருத்தமாகத்தான் உள்ளது. ஆனாலும் நமக்கு மாற்று இல்லையே! கூட மறதியும் உண்டே! 

 

மாற்று என்ன? மறதி என்ன?

பதில் இப்பதிவின் முடிவில் நமக்கே புரியும்!

 

அரசாங்கம்

பாரத நாடு சுதந்திரமடைந்த பிறகு நம்மை நிர்வகிக்க அரசாங்கம் என்ற அமைப்பை அனைத்து மக்களின் வாக்குகளை ஆதாரமாகக் கொண்டு அனுமதிக்கிறோம்! அதன் அங்கங்களை – பிரதிநிதிகளை 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கிறோம்!

அரசாங்கத்தின் பணியாவது

  • நமக்கு அதாவது மக்களுக்கு அடிப்படை வசதிகளை சமமாக வழங்குவது
  • நாட்டின், நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த நடவடிக்கைகளை செம்மையாக செய்வது
  • மக்களின் கல்வி, மருத்துவம், ஆராயச்சி மற்றும் தொழில், தொழில் சார்ந்த நலத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது
  • நாட்டின் உயிர்த்தொழிலான விவசாயத்தை பேணுவது மற்றும் மேம்படுத்துவது

 

அரசாங்கத்தின் நிதி ஆதாரமாவது 

  • மக்களின் (தனி நபர், நிறுவனம்) வருமான வரி
  • மக்களிடம் வசூலிக்கும் சொத்து வரி, தண்ணீர் வரி, சாலை வரி
  • மக்களிடம் வசூலிக்கும் தொழில் வரிகள்
  • மற்றும் இன்ன பிற சேவைகளுக்கான கட்டணங்கள்

 

அரசியல்வாதிகள்

எங்கெல்லாம் தீமை நுழைகிறதோ அங்கெல்லாம் நன்மை அழிகிறது அல்லது விலகுகிறது. எங்கெல்லாம் விழிப்புணர்வு குறைகிறதோ அல்லது இல்லையோ அங்கெல்லாம் தீமை எளிதில் வெல்கிறது!

அரசியல்

அரசு + இயல்: அரசின் இலக்கணத்தைக் குறிப்பது! அதுவே ஒரு அரசின் அழகுங்கூட!

ஆக அவ்விலக்கண வழி வாழ்பவரே அரசியல்வாதிகள்! நிஜத்தில், தற்காலத்தில் அரசியல்வாதி என்றாலே பொய்யர் என்று எண்ணத்தோன்றும் வகையில் நடந்து வருகின்றனர். இது நல்லவர்கள் – நன்மை விலகி விட்டதற்கான சாட்சி! மேலும் நம்மிடையே விழிப்புணர்வு இல்லை என்பதே மூல காரணம்!

வாக்காளர் கடமை
வாக்காளர் கடமை

விழிப்புணர்வு

என்ன விழிப்புணர்வு?

அரசு என்பது நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டது! அதன் நிர்வாகிகள் நமது – மக்களின் சேவகர்களேயன்றி நமது தலைவர்களில்லை. மக்களாட்சி என்று வெறும் வாயில் மட்டும் பேசிக்கொண்டு தனி நபர் புராணம் பாடிக்கொண்டு திரிகிறோம்! மன்னராட்சியில் மன்னர் மற்றும் அவரது குடும்பப் புராணம், புகழ்பாடி வாழ்ந்தோம். இன்று யாராவதொரு அரசியல் கட்சியின் தலைவரை, அவரது வாரிசுகளைப் புகழ்ந்து பின் சென்று ஏமாந்து கொண்டுள்ளோம். மக்களாட்சி என்பது நாம் தேர்ந்தெடுத்தவர்களை நாம் கண்காணிக்கிறோம், தவறு  செய்தால் தண்டனையாக ஆட்சி இழக்க நேரிடும் என்ற பயம் இருக்க வேண்டும். அதுவே நமது விழிப்புணர்வு!

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

அனைவரும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். அதுவும் அப்படிப்பட்ட நல்லவர்க்கே வாக்களிக்க வேண்டும்! 

ஓட்டு

இது நல்லவர்களுக்கு பாராட்டாகவும் தீயவர்களுக்கு வேட்டாகவும் இருக்க வேண்டும்!

எப்படி?

அரசின் அரசியல்வாதிகளின் பணியென்பது மக்களுக்கு சேவை செய்வதே! பிறகு எதற்கு வீண் சுய விளம்பரம்? அரசின் பணத்தில் கடமையைச் செய்ததற்கு என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது?

எந்தத்தாயும் “நான்! என் குழந்தையை அப்படி வளர்த்தேன்! இப்படி வளர்த்தேன்! என்று சொல்வார்களா? சொன்னால் அவர் தாயா?

எந்தத்தந்தையும் “நான் என் பிள்ளையை அப்படி வளர்த்தேன்! இப்படி வளர்த்தேன்! என்று சொல்வாரா? சொன்னால் அவர் தந்தையா?

ஆட்சியில் இருந்த காலத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தார்கள்? எப்படி செய்தார்கள்? என்றெண்ணிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்!

ஒரு சக உறுப்பினரை மதிக்கத் தெரியாதவர் எப்படி சமுதாயத்தில் மக்களின் கேள்விகளுக்கு பொறுப்பாக பதிலளிப்பார்?

நமது வாக்கு! நமது எதிர்காலம்!

நமது வாக்கைக் கொண்டு ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் அரசின் பணத்தைக் கொண்டு இலவசங்களைத் தருவேன் என்பதும் அதற்கு நாமும் வாக்களிப்பதும் நாம் நமது சுயமரியாதை இழந்து இரக்கிறோம் என்பதே பொருள்! இலவசம் என்பது பரிசாக இருக்க வேண்டுமேயொழிய இரவலாக இருக்கக் கூடாது! நமது பணம் தானே நமக்கு வருகிறது என்பது நமது விழிப்புணர்வின்மையின் உச்சம்! இலவசங்களுக்கான கூடுதல் சுமையும் கடனும் நம் தலையிலேயே இதர அடிப்படை பொருள்களின் விலைவாசி உயர்வாய் அமைகிறது!

எது முக்கியம்?

இலவசங்களா? அடிப்படை வசதிகளா?

இலவசங்கள் என்பது பிச்சை! அது நமக்கு கூடுதல் சுமை! அடிப்படை வசதிகள் என்பது நமது ஆதாரம்! அது நமக்கு கூடுதல் பலம்!

இலவசங்கள்

அது என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்! புறக்கணியுங்கள்! எதிர்ப்பு தெரிவியுங்கள்! எங்கள் பணத்தில் நீங்கள் ஒன்றும் பிச்சையிட வேண்டாமென்று!

அடிப்படை வசதிகள்

  • தரமான சாலை வசதிகள்
  • தரமான கல்வி வசதி
  • தேவையான தொழில் உதவிகள்
  • தரமான மருத்துவ வசதி
  • நேர்மையான விலைவாசி

எந்தவொரு அரசு பதவிற்கு வந்தாலும், நல்லதே செய்ய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்!

இப்போது பதிவின் முதல் வரியை நினைத்துக் கொள்ளுங்கள்!

தீயவர்களை புறக்கணித்துத் தோற்கடிப்போம்! நல்லவர்களில்லை என்பது நிதர்சனமான உண்மை. அதனால் இருப்பவரில் நல்லவரை நமது-மக்கள் உளம்-தேவை அறிந்து சேவை செய்ய வைப்போம்! அதுவும் அவரது கடமையே என்பதையும் உணர வைப்போம்!

மாற்றம் என்பதுங்கூட மாற்றத்திற்குரியதே!

 

நேர்மையாக வாக்களிப்போம்! இலவசங்களை – இரவல்களை புறக்கணிப்போம்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *