Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

One Nation

One Nation
One Nation

Story Highlights

  • ஒரே தேசம் - வேற்றுமையில் ஒற்றுமை

One Nation

ஒரே தேசம்! ஒரே மொழி! ஒரே வரி! ஒரே கல்வி! என்பதெல்லாம் சமுதாயத்தின் அப்பட்டமான தனி மனித அத்துமீறல்! இந்திய தேசத்தின் கட்டமைப்பே வேற்றுமையில் ஒற்றுமை என்பதாகும்! இந்திய தேசத்தை உலகமே ஒரு துணைக்கண்டம் என்றுதான் வகைப்படுத்தியுள்ளது!

 

வெள்ளையர் படையெடுப்பு, முகலாயர்களின் படையெடுப்புகளுக்கு முன்பு, இந்த தேசம், பல பிராந்தியங்களாக, பல்வேறு மன்னர்களின் கீழ் வாழ்ந்து வந்ததை நாமறிவோம். பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், நாகரீகங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி வந்தோம்.

மக்களாட்சி மலர்ந்தபோது, இனம், மொழி, நாகரீகம், வாழ்க்கைமுறை, நிலப்பரப்பு ஆகியவற்றில் வேறுபட்டிருந்தாலும் இந்தப் பிராந்தியத்தின் – மண்ணின் மைந்தர்களாய், நமது ஆன்ம பலத்தால் ஒருங்கிணைந்தோம்.

எனவே, நமது பலமே, அவரவர் வசதிக்குள், அவரவர் சுதந்திரத்தில் சிறந்து விளங்குவதே! அதை ஆட்சியாளர்கள் புதுமை செய்கிறோம், நாட்டின் முன்னேற்றத்திற்குச் செய்கிறோம் என்ற போர்வையில், அடிப்படைகளை அசைப்பது, உண்மையில், வேறு ஏதோ பெரிய தீமையை மறைக்கும் அல்லது மறக்கடிக்கச் செய்யும் கண்துடைப்பே! 

இந்த தேசம், ஐவகை நிலங்களால் மட்டும் ஆனது இல்லை. மொழி, அதன் வளம் மற்றும் தாக்கம், அவை சார்ந்த பண்பாடு மற்றும் கல்வியறிவு, அவை சார்ந்த புரிதல் மற்றும் சாதனைகளால் ஆனது.

 

ஆட்சியாளர்கள், ஒவ்வொரு பிராந்தியத்தின் தனித்துவத்தைப் பேண வேண்டுமே ஒழிய, பொது விதி என்று, திருட முயலக்கூடாது. காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதிலும், அம்மாநிலம், மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் சமம் என்பதிலும், மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதே சமயம், அம்மாநிலத்தின் உரிமைகளை, அம்மாநிலத்தின் வளங்களை, முன்னேற்றம் என்ற போர்வையில், கொள்ளையடிக்க மட்டுமே முயலக்கூடாது.

 

உலக அளவில், கடந்த பத்து வருடங்களாகவே, பொருளாதார சிக்கல் நிலவி வந்த போதிலும், அது இந்தியர்களைப் பெரிதும் பாதிக்காதிருந்ததற்கு, நமது அடிப்படை வாழ்க்கை முறை மற்றும் சேமிப்பு முறையே காரணம். உலக மயமாக்கல், என்ற போர்வையில் இந்தியாவை, சந்தைக்கடையாக்கியதின் பயனே, இன்றைய பொருளாதார சிக்கல்.

 

தற்போது ஆளும் அரசாங்கமும் சரி, இதற்கு முந்தைய அரசாங்கங்களும் சரி, யாவருமே, இதற்கு கூட்டுப்பொறுப்பு தான். ஏனென்றால், அன்று, அவர்கள் சொன்னதை-செய்ததை, இவர்கள் எதிர்த்தார்கள்! பிறகு, இவர்கள் ஆட்சிக்கு வந்ததும், இவர்களும் அதையே சொன்னார்கள் – செய்தார்கள்! ஆனால், இன்று அவர்கள் எதிர்த்தார்கள்!

 

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும், கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாவது, அரசாங்கத்தின் இயக்குனர்களான அதிகாரிகள் (தலைமைச் செயல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், கமிஷனர்கள் மற்றும் கிராம அலுவலர்கள்) மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் செயலாளர்கள் இவர்களின் திறனின்மையும், தவறான வழிகாட்டுதல்களும் தான், இந்த தேசத்தின் தொடர்ந்த பின்னடைவுகளுக்கு முக்கியமான காரணம்! (உ-ம்:  நீர் ஆவியாதலைத் தடுக்க, தெர்மோகோல் உபயோகிக்கும் விந்தை போன்ற சாதனைகளை நமக்கு படைத்துக் காண்பித்தது)

 

மக்களின் இயல்பான வாழ்க்கை முறையை உயர்த்துகிறோம் என்ற போர்வையில், நமது பாரம்பரியத்தை, வியாபாரத்துக்காய் விற்று விட்டு, டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா என்று, இன்னும் எத்தனை நாட்கள் ஏமாறப்போகிறோமோ?

 

டிஜிட்டல் இந்தியா – ஒரு தோல்வியடைந்த திட்டமே! ஒரு நேர்மையான செயலுக்கு, அரசாங்கம், வங்கிகள் மற்றும் வியாபாரிகள் தரும் சன்மானம் – சேவை வரி! தூய்மை இந்தியா – குப்பை போடாதே; அசுத்தம் செய்யாதே என்பதை வலியுறுத்துவதோடு, சமுதாயத்திற்கும், மக்களுக்கும் தீமை செய்யாதே என்பதே இதன் அடிநாதமாக இருந்திருக்க வேண்டும்.

 

கல்வியில் மாற்றம் என்ற பெயரில் கழிவினைப் புகுத்தலும், மொழியில் ஒருமை என்ற பெயரில் உணர்வினை அழித்தலும், ஆட்சியாளர்களின் திட்டமெனில், அதைக் குறை மட்டுமே கூறி, பழி செய்வது, எதிர் கட்சிகளின் வேலை என்றாலும், நம் உணர்வுகளில் ஏறி நின்று, சவாரி செல்வதின் மூலம் புகழ் – பணம் தேடும் இழிநிலை புரட்சிக் கட்சிகளின் சாதனை என்றாலும், இவையாவற்றையும் புரிந்து கொள்ளாமலிருப்பது நமது குற்றமே!

 

இந்த தேசத்தின் முன்னேற்றம், மக்களின் கைகளிலே! அரசாங்கத்தின் கைகளிளல்ல! போதும் நிறுத்துங்கள்! நாட்டின் மக்கள், யாரையும் எதிர்பார்த்து, காலம் கழிக்க வேண்டாம்! முதலில் நமது வீட்டையும், பிறகு நாட்டையும், நாட்டின் நிலையையும் – தேவையையும், அதை நிறைவேற்றும் வழிமுறைகளையும், அதற்கான குறைந்த பட்ச திட்டமிடல்களையும் அறிந்து கொள்வோம்! அரசியல்வாதிகள் அளப்பதை, நாம் புரிந்து கொள்ள முயல்வோம்! பிறகு கேள்விகள் – பதில்கள் யாவும் தாமே கிடைக்கும்!

 

அவரவர் மொழியிலே கற்றுக்கொள்வோம், அவரவர் மொழியிலே புழங்குவோம்; முழங்குவோம்! அவரவர் கலாசாரத்தையே பின்பற்றுவோம்! பிறர் மொழியை, வாழ்க்கை முறையை, கலாச்சாரத்தைப் போற்றவும் தூற்றவும் வேண்டாம்!

 

நமது அறியாமையே அனைத்து பொதுக் குற்றங்களுக்கும், சமுதாய அநீதிகளுக்கும் காரணம்!

 

ஊழல் என்ற வார்த்தையை அகராதியில் மட்டுமே இடம் பெறச்செய்வோம்! தனி மனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தின் விடியல்!

 

ஒரே தேசம் - தேடல் தொடரும் (ONE NATION - the hunt continues)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *